புதிதாக உதயமாகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சிறப்புகள்

புதிதாக பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் இன்று உதயமாகிறது. 

மக்களின் 15 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக தொடங்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த ஜனவரி 8ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைமையிடம் கள்ளக்குறிச்சி நகரம் ஆகும். இம்மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் என 2 வருவாய் கோட்டங்கள் உள்ளன.மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கல்வராயன்மலை(புதியது) ஆகிய 6 வருவாய் வட்டங்களும், 573 வருவாய் கிராமங்களும் இடம்பெறுகின்றன.

இம்மாவட்டம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோயிலூர், சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய 5 பேரவைத் தொகுதிகளையும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியையும் கொண்டுள்ளது.2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 16,82,687 ஆகும். அதில் ஆண்கள் 8,50,706 பேர், பெண்கள் 8,31,981 பேர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பெரும்பன்மையான பகுதிகள் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்த விவசாயப் பகுதிகளாக உள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மணிமுத்தாறு, கோமுகி அணைகளின் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன.

இம்மாவட்டத்தில் நெல், கரும்பு ஆகிய பயிர்களே அதிக அளவில் விளைகின்றன. இதனால் இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகளும், 3 சர்க்கரை ஆலைகளும் உள்ளன.கல்வராயன் மலை, கோமுகி அணை, தாகப்பாடி அம்மன் ஆலயம் ஆகியவை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தளங்கள் ஆகும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், மேகம், பெரியார், பண்ணியப்பாடி போன்ற அருவிகளும் உள்ளன.

Exit mobile version