திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் பசுமை குடில் அமைத்து அதிக மகசூல் தரும் நெதர்லாந்து மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அமைந்துள்ள காய்கறி மகத்துவ மையத்தில், இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் குறைவான தண்ணீர் மூலம், பசுமை குடில் அமைத்து பல வகையான
காய்கறிகளை சாகுபடி செய்யும் முறைகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இங்கு நவீன முறையில் பசுமைக்குடில் அமைத்து, முதன்முறையாக நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹாட் பெப்பர் எனப்படும் ஒருவகை பச்சை மிளகாயை வளர்க்கின்றனர். மேலும் கப்பிப், தண்டர், ரும்ப்லீ, குர்ட்லஸ் உள்ளிட்ட ஐந்து மிளகாய் வகைகள் இங்கு சாகுபடி செய்யப்படுகிறது.
இதுபோன்ற பசுமை குடில் அமைத்து, நாத்து நடவு செய்து மூன்று மாதங்களில் மகசூல் எடுக்கலாம் என்கின்றனர் காய்கறி மகத்துவ மைய விஞ்ஞானிகள். ஒரு மிளகாய் சுமார் 20 சென்டிமீட்டர் நீளம் வரை வளரும் தன்மை கொண்ட நிலையில், இதில் காரத்தன்மை குறைவாகத்தான் இருக்கும். பாஸ்ட் புட் மற்றும் வீட்டுச் சமையலில் சுவைக்காக சேர்க்கப்படும் இந்த வகை மிளகாய்க்கு வெளிநாடுகளில் அதிக அளவு வரவேற்பு உள்ளது.