அறநிலையத்துறை ஒத்துழைக்காவிட்டால், ஆக்கிரமிப்புகளில் இருந்து கோயில் நிலங்களை வருவாய் துறையால் மீட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோயில் சொத்துக்கள் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டு, தனியாருக்கு விற்கப்பட்டுள்ளதாக திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நாகமங்கலத்தில் தமிழக அரசு துறைகளிடமோ, அறநிலையத்துறையிடமோ அனுமதி பெறாமல் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கோயில் நிலங்கள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய சேலம் பத்திரப்பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்தும், இதுவரை அறநிலையத்துறை தகவல்களை வழங்கவில்லை என்றும், 7 கோயில்களின் நிலங்களையும் பாதுகாக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களின் விவரங்களை வருவாய்த்துறை கேட்கும்போது, அதை வழங்குவதற்கு அறநிலையத்துறைக்கு என்ன தயக்கம் என கேள்வி எழுப்பினார்.
போதிய ஒத்துழைப்பு தராவிட்டால் வருவாய்த் துறையால் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற நீதிபதி, அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 4ஆம் தேதி ஒத்திவைத்தார்.