தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை, ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக உள்ள நடிகர் விஷால், பொதுக்குழு கூட்டத்தை நடத்தவில்லை என்றும், தயாரிப்பாளர் சங்கத்திற்கு வாடகை கட்டடத்தை பயன்படுத்தி வருகிறார் என்றும் புகார்கள் எழுந்தன. மேலும், சங்கத்தின் நிதிகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாருக்கு, தயாரிப்பாளர் சங்கம் உரிய விளக்கம் அளிக்காததால், தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க, தமிழக அரசு சார்பில், சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து விஷால் தொடர்ந்த மனுவையும் உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்திற்கு, ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் தேர்தல் நடத்தக் கோரி, தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் கடந்த ஜூன் மாதம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை வரும் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும், அதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை தேர்தல் அதிகாரியாக நியமிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.