சட்டப்படியான கடமைகளை நிறைவேற்றும் காவல்துறையினரை மிரட்டும் நபர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
சிவகங்கை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பொன்ரகு, சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தர விடக்கோரி, சந்திரன் என்பவர் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இதனை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழகத்தில் வழக்கு பதிவு செய்யும் காவல்துறையினரை மிரட்டும் போக்கு அதிகரித்து இருப்பதாக கூறினார். குற்ற வழக்கில் தொடர்புள்ளவர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் ஊக்குவிக்காது என்று அவர் எச்சரித்தார்.
வழக்கில் உண்மையும், சூழ்நிலையும் முக்கியம் என்று குறிப்பிட்ட நீதிபதி, விதிமீறல் இல்லாத நிலையில் காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்தார். சட்டப்படி கடமைகளை நிறைவேற்றும் காவல்துறையினரை மிரட்டும் நபர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்