உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல் ஆணையம் வாதம்

மதுரையில் சித்திரைத் திருநாளில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் இன்று பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்நாளில் மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெறவுள்ளதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் தேதியை மாற்றும் சாத்தியம் குறைவு என்றும் தேர்தல் நேரத்தை 2 மணி நேரம் நீடிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வு, 100 சதவீதம் வாக்குப் பதிவாக வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் நோக்கம். திருவிழா சமயத்தில் தேர்தலை நடத்துவதன் மூலம், இந்த நோக்கத்தில் இருந்து தேர்தல் ஆணையம் பின் வாங்குகிறதா என்று கேள்வி எழுப்பினர். சூழலை கணக்கில் கொள்ளாமல் அதிகாரிகள் செயல்படுவது நல்லதல்ல என்றும் அறிவுரை வழங்கிய நீதிபதிகள், மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தேர்தல் தேதியை மாற்ற முடியுமா என்றும் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் இன்று பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தவறினால், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Exit mobile version