பன்றி, டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்ட நிலையில், நீதிபதிகள் உத்தரவுப்படி சுகாதாரத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கடந்த 20-ம் தேதி வரை பன்றி காய்ச்சலுக்கு 27 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 13 பேரும் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழக அரசு மேற்கொண்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கையில் விளக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விரைவாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன், அடுத்தடுத்து மேற்கொள்ளக்கூடிய நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.