கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல்வைக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட ஆயிரத்து 415 கட்டிடங்களை பூட்டி சீல் வைக்க கொடைக்கானல் நகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை கணக்கெடுக்கும் பணிகள் நடத்தப்பட்டன.
இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, வியாபாரிகள் இன்று கடைகளை அடைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வியாபாரிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சுற்றுலா கார், வேன் ஓட்டுநர்களும் தங்களது வாகனங்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொடைக்கானலின் முக்கிய பகுதிகளான பேருந்து நிலையம், மூஞ்சிக்கல், ஏரிசாலை, 7 ரோடு, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் ஆகியவை அடைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் சுற்றுலா வாகனங்களும் இயக்கப்படாததால், சுற்றுலா பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், சுற்றுலா பயணிகளை நம்பி வாழும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் தெரிவித்தனர்.