ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி அப்போலோ மருத்துவமனை தொடுத்த வழக்கில், அப்போலோ மருத்துவமனையின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை களைவதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம், தங்களை விசாரிக்க தடை விதிக்க கோரியும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க 21 துறைகளை சார்ந்த நிபுணத்துவம் கொண்ட தமிழக அரசு சாராத சுதந்திரமான மருத்துவ குழுவை நியமிக்க கோரியும், அப்போலோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆணையத்தின் 90 சதவீத விசாரணை முடிவடைந்துள்ளதாகவும், ஆணையம் அப்போலோ மருத்துவமனைக்கு உரிய அவகாசமும், நியாயமான வாய்ப்புகளையும் வழங்கி உள்ளதாகவும் கூறி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கேட்ட அப்போலோ மருத்துவமனையின் கோரிக்கையை நிராகரித்து வழக்கை முடித்து வைத்தது.