தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோயிலில் உள்ள பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டி கிராமத்தில் 35 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மாதந்தோறும் பெளர்ணமி சிறப்பு பூஜைகளும், ஆண்டதோறும் மாசி கொடை திருவிழாவும் வெகு சிறப்பாக நடைபெறும்.
இந்த திருவிழாக்களில் கலந்து கொள்வதற்காக சித்தவநாயக்கன்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
கடந்த 17ஆம் தேதி பெளர்ணமி தினத்தன்று கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் குளிப்பதற்காக கோயில் வளாகத்தில் உள்ள குளியலறைக்கு சென்றுள்ளார். அந்த குளியலறையில் சம்பந்தமில்லாத கருப்புநிற வயர் இருப்பதைக் கண்ட பெண், அது என்னவென்று எடுத்து பார்த்தபோது கேமிரா என்பது தெரியவந்தது.
இந்த தகவலை அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர், குளியல் அறையில் இருந்த 3 ரகசிய கேமிராக்களை கண்டுபிடித்து மீட்டனர். பெண்கள் குளியல் அறையில் ரகசிய கேமிராக்கள் பொருத்தியது மர்ம நபர்கள் யார் என்பது குறித்து கோயில் நிர்வாகத்திடம் விளாத்திக்குளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.