அழகோடு ஆரோக்கியத்தையும் தரும் மூலிகைப் புடவைகள்

உடுத்தும் ஆடைகள் நம் அழகை மெருகேற்றுகின்றன. அழகோடு ஆரோக்கியத்தையும் தரும் உடைகள் கிடைத்தால், அது ஆச்சர்யம் அளிக்கும் தானே. அவ்வாறு இயற்கை நார்களைக் கொண்டு உருவாக்கப்படும் மூலிகைப் புடவைகளைப் பற்றிய சிறப்புத் தொகுப்பைக் காண்போம்.

காஞ்சிபுரம், குன்றத்தூர், அனகாபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெசவுத்தொழில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். அதில் அனகாபுத்தூர் பகுதியில் இயற்கைக்கு குந்தகம் விளைவிக்காத வாழை நார், கற்றாழை, அன்னாச்சி, மூங்கில், வெட்டிவேர், சணல் உட்பட 25 வகையான இயற்கை நார்களை இணைத்து, மூலிகை சேலைகளை நெசவுசெய்து விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக இயற்கை நார் நெசவுக்குழுமம் மற்றும் கைவினையாளர்கள் என்ற அமைப்பைத் துவங்கி, 15 வருடங்களாக நடத்தி வருகிறார் சேகர்.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயற்கை நார்சேலைகள் உள்ளூர் மட்டுமில்லாமல் தமிழகத்தின் பிறமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெண்களையும் இந்த சேலைகள் வெகுவாக ஈர்க்கின்றன.

புதிய வகை மூலிகை புடவைகளை மத்திய அரசு ஆய்வுக்குட்படுத்தி சான்று மற்றும் மானியம் தரவேண்டும் என்றும், தங்கும் இடத்துடன் கூடிய கைத்தறிச் சாலைகளை நிறுவித் தரவேண்டும் என்றும் நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விசைத்தறி ஆடைகளை விட, கைத்தறி ஆடைகளை உடுத்துவதால், நம் உடலுக்கு ஆரோக்கியம் மேம்படுவதுடன், தறி நெய்யும் நெசவாளர்களின் வாழ்வும் மேம்படும் என்பது மட்டும் நிச்சயம்.

Exit mobile version