ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்.
அண்மையில் நடந்து முடிந்த ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில், ஜார்க்கண்ட் முக்கி மோர்ச்சா 30 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு இடங்களையும் கைப்பற்றின. தனித்து போட்டியிட்ட பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார். ராஞ்சியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.