உணவின்றி தவித்த நரிக்குறவர் இன மக்களுக்கு உடனடி நிவாரணம், தாயை இழந்து தவித்த மகனுக்கு ஆறுதல், கர்ப்பிணி மனைவிக்கு உதவ விரும்பிய கணவர், ஊருக்குச் செல்ல பாஸ், என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தன் ட்வீட்டர் அக்கவுண்ட் மூலம் பொதுமக்களின் குறைகளைக் கவனித்து, உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்து வருகிறார். சமூக ஊடகம் மூலம் மக்களின் குறை தீர்க்கும் மறுமலர்ச்சியை, ஆட்சியதிகாரத்தில் உருவாக்கி உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
உள்ளூர் குடிமகன் முதல் உலகத் தலைவர்கள் வரை… எல்லோரும் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்துள்ளனர். தங்கள் எண்ணங்களைப் பகிர்வதற்கும், பிறரின் எண்ணங்களைத் தெரிந்து கொள்வதற்கும், பொழுதை ஜாலியாகப் போக்குவதற்கும், எனப் பலவகைகளில் அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது ட்வீட்டர் பக்கத்தில் தன் எண்ணங்களைப் பதியும் வெறும் தளமாக மட்டுமின்றி, தமிழக அரசின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அறிவிப்புக் களமாக மட்டுமின்றி, பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும், புதிய நம்பிக்கைத் தலமாகவும் அதை மாற்றி இருக்கிறார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி என்பவர், திருவாரூர் மாவட்டம், அடஞ்சவிளாகம் பகுதியில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 40 குடும்பங்கள், ஊரடங்கு உத்தரவால், உணவின்றி தவிப்பதாக ட்வீட்டரில் பதிவிட்டிருந்தார். அதை உடனடியாக கவனித்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உணவின்றி தவிக்கும் மக்களில் ஒருவரின் எண்ணைப் பகிருங்கள்… அந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்குத் தேவையான உணவு பொருட்களை உடனடியாக கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவிட்டதுடன், அந்த நபர் அளித்த தொலைபேசி எண் மூலம், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, 40 நரிக்குறவர் இன மக்களின் இன்னலைப் போக்கினார். அதுபோலவே பெரம்பலூர்-எறையூர் நரிக்குறவர் காலனியில் உள்ள 25 நபர்கள் ஆந்திராவில் உணவு, தங்குமிடம் இல்லாமல் தவிப்பதாக YS Jegan என்பவர் பதிவிட்டிருந்தார். அதையும் கனிவோடு கவனித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக, அதிகாரிகள் மூலம் ஆந்திர மாநிலத்தில் அவர்கள் இருக்கும் இடத்தைத் தொடர்பு கொண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
இதற்கிடையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னு எஸ்.பி.கே என்ற ட்வீட்டர் ஐடியில் செயல்படும் இளைஞர் ஒருவர், தமது அம்மா இறந்துவிட்டார் என்றும், ஆனால், அவரது முகத்தைக்கூட பார்க்க முடியாதவனாக இருக்கிறேன் என்றும் வாழ்க்கையில் எந்த மகனுக்கும் இப்படி நிகழக்கூடாது என துயரத்தோடு பதிவிட்டிருந்தார். அதைக் தாயுள்ளம் கொண்டு கவனித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மிகுந்த மனவேதனை அளிக்கிறது தம்பி, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டு, தாயை இழந்து தவிக்கும் மகனை ஆற்றுப்படுத்தி இருந்தார்.
பயஸ் அர்சி என்ற மற்றொரு நபர் “சார், தயவு செய்து ஒண்டேயாவது கேப் கொடுங்க என்றும், தம்முடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதாகவும், தான் பக்கத்து மாவட்டத்தில் சிக்கி கொண்டதாகவும் பிரசவத்துக்கு மருத்துவமனை செல்வதற்கு 108 ஆம்புலன்சை அழைப்பதற்கு கூட ஆள் இல்லை, தனியாக எப்படி சமாளிப்பதுன்னு தெரியவில்லை, தமக்கு ஊருக்கு செல்ல பாஸ் கிடைக்கவில்லை இது மெடிக்கல் எமெர்ஜென்சி இல்லையா?” என்று குறிப்பிட்டு தன் இக்கட்டான சூழலை விளக்கி இருந்தார். அதைக் கவனித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “உங்கள் தொடர்பு எண்ணை தெரிவியுங்கள் தம்பி, நிச்சயமாக தாயையும் சேயையும் பாதுகாக்க அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும்” என்று நம்பிக்கை அளித்ததோடு, அவர் அளித்த தொடர்பு எண் மூலம், அவர் ஊருக்கு செல்வதற்கான பாஸ் அவர் இருக்கும் இடம் தேடிச் சென்று கிடைக்கவும் வழி செய்தார்.
அதில் உருகிப்போன அந்த நபர், உடனடியாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்ததோடு, தனக்கு முதல்வரை நினைத்து பெருமையாக இருப்பதாகவும் பதிவிட்டார். கோரிக்கை வைத்தவர்களின் நிலையை உணர்ந்து, அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களோ என்று பாரபட்சம் காட்டாமல், மக்கள் முதல்வராய் செயல்பட்டுவரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும், அவர் கணக்கைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.