சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கேரளா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் ஏராளமான பக்தர்களை கொண்ட சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, வரும் நவம்பர் மாதம் முதல் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களான நவம்பர் 17ஆம் தேதி தொடங்கி ஜனவரி 16 ஆம் தேதி வரை ஹெலிகாப்டர் சேவை இருக்கும் என தெரிகிறது.
கேரளாவின் காலடியில் இருந்து நிலக்கல் வரை செல்லும் ஹெலிகாப்டரில், 4 பேர் பயணிக்கலாம். இதற்காக காலடியிலும், நிலக்கல்லிலும் ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமானப் பயணிகள் கொச்சி விமான நிலையம் அமைந்துள்ள நெடும்பஞ்சேரியில் இருந்து காலடி வரை காரில் அழைத்து செல்லப்படுவார்கள். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் செல்லலாம்.
காலை 7 மணிக்கு காலடியில் இருந்து முதல் ஹெலிகாப்டர் புறப்படும். 35 நிமிடத்தில் நிலக்கல் சென்றடையும். தினமும் இரு மார்க்கத்திலும் 6 முறை ஹெலிகாப்டர் சேவை இயக்கப்படும். ஹெலிகாப்டரில் பயணம் செய்பவர்களுக்கு சலுகை கட்டணம் எதுவும் வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.