திமுக தலைமையுடன் அண்மைக்காலமாக மோதல் போக்கை கடைபிடித்து வந்த சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம், கட்சியிலிருந்து நிரந்தமாக நீக்கப்பட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கத்தினால் மேலும் சில எம்.எல்.ஏக்கள், திமுகவிலிருந்து வெளியேறலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது…
குடும்ப உறுப்பினர்களுக்கு ஆட்சியில் இடம், தொண்டர்களுக்கு மனதில் இடம் என்பது திமுக தலைமையின் கொள்கை. பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த கட்சி, தாத்தா, தந்தை, பேரன் என ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வருவதாக திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தினால் கட்சிக்குள் பொறுமல்கள் உள்ள நிலையில், முன்னணி தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறுவது தொடர் கதையாகி விட்டது. அவ்வாறு சமீபத்தில் வந்தவர்களில் விபி துரைசாமியும், கு.க செல்வமும் குறிப்பிடத்தக்கவர்கள்.
சட்டமன்றத்திலும், திமுகவிலும் பல்வேறு உயர்பதவிகளை வகித்த விபி துரைசாமி, திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். கலைஞரின் பேரன் மற்றும் ஸ்டாலினின் மகன் உள்ளிட்ட தகுதிகளை வைத்துக் கொண்டு, உதயநிதி கட்சிக்குள் அதிகாரம் செலுத்துவதாக அவர் நேரடியாகவே குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் திமுகவிலிருந்து விலகிய அவர் பாஜகவில் இணைந்தார்
இவரைத் தொடர்ந்து திமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர் குக செல்வம். ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏவான இவர், டெல்லிக்கு சென்று பாஜக தேசியத் தலைவர் நட்டாவை சந்தித்தார். பாஜகவில் நேரடியாக இணையாவிட்டாலும், பாஜக நடத்திய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஸ்டாலினை விமர்சித்தும், பிரதமர் மோடியை பாராட்டியும் அவர் பேசியது ஊடகங்களில் வெளியாகின. இதையடுத்து கட்சியிலிருந்து அவரை நீக்கி திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவான ஜெ. அன்பழகன் மறைவுக்கு பிறகு சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என கு.க செல்வம் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக, உதயநிதி ஸ்டாலினின் ஆதரவு பெற்ற சிற்றரசு என்பவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது.கட்சிக்குள் காலம் காலமாக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லாமல் உதயநிதி ஸ்டாலினுக்கு வால் பிடிப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுவதாக போர்க்கொடி தூக்கினார் குக செல்வம். இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே குக செல்வம் பதவி விலகியதாக கூறப்படுகிறது. குக செல்வத்தைப் போல திமுக பொருளாளர் துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோரும் திமுக தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அரசியல் கடலில் திமுக எனும் கப்பலை வாரிசு என்னும் ஓட்டை மூழ்கடித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.