தீபாவளியையொட்டி அதிக நேரம் பட்டாசு வெடித்ததால் காற்று மாசடைந்ததையொட்டி, நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கு 3 நாட்கள் தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
காற்று மாசு காரணமாக தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக பட்டாசு வெடித்ததால் காற்று மாசின் அபாய கர அளவான 500ஐ தொட்டது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு புகை காணப்பட்டது. இதனையடுத்து காற்றின் மாசு அபாயகரமான நிலையை அடைந்துள்ளது.
இந்தநிலையில், நேற்றிரவு 11 மணி முதல் சரக்கு லாரிகள், டேங்கர் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழையவிடமால் தடுத்து நிறுத்தப்பட்டு, வேறு பகுதிகளுக்குத் திருப்பி விடப்பட்டு வருகின்றன. இத்தடை வரும் ஞாயிறு இரவு 11 மணி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக டெல்லியின் எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் காய்கறிகள், உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், பால், பழங்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.