காஷ்மீர் பனிப்பொழிவில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்களை பத்திரமாக மீட்டுத் தர, அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, நவம்பர் 30ஆம் தேதி 500க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் காஷ்மீரில் உள்ள சோபியான் பகுதிக்குச் சென்றன. அங்கிருந்து கடந்த 7ஆம் தேதி ஆப்பிள் லோடு ஏற்றிக்கொண்டு திரும்பிய போது, கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, கனரக வாகனங்களுக்கு உள்ளூர் காவல்துறையினர் அனுமதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் லடாக் பகுதியில் உள்ள லோகமண்டா என்னும் இடத்தில், தமிழகத்தைச் சேர்ந்த லாரிகள், கடந்த 15 நாட்களாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதாக தெரிகிறது. இதனிடையே, நாமக்கல் மாவட்டம் பாச்சல் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் செந்தில்குமார், தனது குடும்பத்தினருக்கு தொடர்பு கொண்டு, குளிர் தாங்க முடியாமல் தவித்து வருவதாகவும், சாப்பிடுவதற்கு சரியான உணவு கூட கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, லாரி ஓட்டுநர் செந்தில்குமாரின் மனைவி மற்றும் தாய் ஆகியோர், அவரை பத்திரமாக மீடுத்தர அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், இதனிடையே, காஷ்மீரில் சிக்கியுள்ள லாரி ஓட்டுநர்களுடன் தொடர்பு கொள்வதற்கு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டிருப்பதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார். மேலும், ஓட்டுநர்களின் நிலவரம் அறிந்து, அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.