டெல்லியில் இதுவரை இல்லாத அளவில் கடும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.
டெல்லியில் தீபாவளியையொட்டிக் கடுமையான புகைமூட்டம் சூழ்ந்ததை அடுத்து ஒருவாரத்துக்குப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. காற்று மாசுபாடு குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் தானாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு டெல்லி, அரியானா, பஞ்சாப் மாநிலத் தலைமைச் செயலர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது. அவ்வாறு ஆஜரான தலைமைச் செயலர்களிடம் வைக்கோல் எரிப்பைத் தடுக்கக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியது. இதையடுத்துச் சில நாட்களுக்குப் புகை மூட்டம் குறைந்திருந்தது. இந்நிலையில் இன்று காலை முதலே புகைமூட்டம் அதிகரித்ததால் பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. காலையில் இருந்ததைவிட மாலையில் புகைமூட்டம் மிகவும் அதிகரித்தது. இந்தியா கேட், நாடாளுமன்றம், மத்திய அரசு செயலகம் அமைந்துள்ள பகுதி, குடியரசுத் தலைவர் மாளிகை ஆகிய பகுதிகளில் சாலையில் சற்றுத் தொலைவில் செல்பவரைக் கூடக் காண முடியாமல் மறைக்கும் அளவுக்குப் புகை மூட்டம் இருந்தது.