தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வடமாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. சென்னையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. நீர் நிலைகள் நிரம்பி வருவதாலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதாலும் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த கீழையூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டித்தீர்த்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடியில், 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வந்தநிலையில், நேற்றும், மழை வெளுத்து வாங்கியது. தாளவாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பகல் வேளையில் வெயில் வாட்டி வந்த நிலையில் திடிரென பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் இந்த மழை விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பணப்பாளையம், அண்ணா நகர், வடுகபாளையம் ஆகிய பகுதிகளில் பரலாக மழை பெய்தது.