வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரமணாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் வேளச்சேரி, அடையாறு, கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
அதேபோல புறநகர் பகுதிகளான ஆவடி, பூவிருந்தவல்லி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் பலவலாக மழை பெய்துள்ளது.
கடந்த சில வாரங்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கடும் வெப்பம் நிலவியது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரை அதிகபட்சமாக நந்தனத்தில் 38 மில்லிமீட்டரும், மேற்கு தாம்பரம் மற்றும் மீனம்பாக்கத்தில் 25 மில்லிமீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 20 புள்ளி 5 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ய வாய்பய் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.