அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலால் கேரளாவில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
பொங்கி எழுந்த கடல் அலைகள் ஊருக்குள் புகுந்ததால் கடலோரத்தில் வசிக்கும் கிராம மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
டவ்-தே புயல் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் புயல் மையம் கொண்டிருப்பதால், கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. மேலும், கேரளாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. சீற்றத்துடள் வெளியேறும் கடல் நீர் புகுந்துள்ளதால், கடலோர கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், அங்குள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கும் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனிடையே கேரளத்தில் தென்மேற்கு பருவமழை வரும் 31 ல் தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை இயல்டபான நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மே 18ம் தேதி குஜராத் அருகே மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் டவ்-தே புயல் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனால், அங்கு முன்னேற்பாடுகள் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளன.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் இருந்து ஐந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் குஜராத் கடலோர மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
மேலும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு, 50க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.