தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கனமழை பெய்ததால், கூழாங்கல் ஆறு, வாழைத்தோட்டம் ஆறு, சோலையார் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சோலையார் அணையில் வினாடிக்கு ஆயிரத்து 318 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொடையாஞ்சி அம்பலூர் திம்மாம்பேட்டை, எக்லாஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானமழை பெய்தது. வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை தொடர்வதால் வருவதால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் விவசாயிகள் கூறினர்.
வாணியம்பாடி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதுகுளத்தூரை அடுத்த தூரி, எட்டிசேரி, கீழகாஞ்சிரங்குளம், சித்திரங்குடி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. மழை வெள்ளம் பெருக்கெடுத்து கண்மாய், குளங்களில் நிரம்பி வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மற்றும் பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம், குமுளி, உத்தமபாளையம் ,தேவாரம் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.