தமிழகத்தில் கன மழை : பல இடங்களில் வெள்ளம்!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்த கனமழை காரணமாக, ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்டத்திலுள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன் மார்கன் மற்றும் கூடலூர், பந்தலூர் மற்றும் தேவாலா உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கூடலூரில் உள்ள பாண்டியாறு மற்றும் புன்னம் புழா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்ததால், வயல் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. அப்பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். ஆற்றை கடக்க முடியாமல் சிக்கித்தவித்தவர்களையும் தீயணைப்புத்துறையினர் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

தென்காசி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால், குற்றால அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை தொடர்ந்ததன் காரணமாக, 2-வது நாளாக குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், அருவி வெறிச்சோடி காணப்படுகிறது. 

கோவை மாவட்டம் மேட்டுபபாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால், பவானி ஆற்றில் 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 97 அடியாக உள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி பில்லூர் அணையில் இருந்து நான்கு மதகுகள் வழியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version