தமிழகத்தில் கனமழையால் நிரம்பும் நீர்நிலைகள்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள மஹா மற்றும் கியார் புயல்கள் காரணமாக, குமரிக்கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், ஏற்கனவே மீன் பிடிக்கச் சென்றுள்ளவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்கள், நீர் தேங்கும் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து, முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரபிக்கடலில் உருவாகியுள்ள மஹா புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றார் அணைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டமானது முழு கொள்ளளவான 48 அடியில், 37.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 634 கன அடி நீர் வரத்து உள்ளது.

இதேபோல், பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவான 77 அடியிலிருந்து 70.20 அடியாக உள்ளது. அணையில் வினாடிக்கு 2 ஆயிரத்து 534 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில் 4 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி மற்றும் சிற்றார் அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்ற படுவதால் வள்ளியாறு, தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு, நீர்வரத்து 5 ஆயிரத்து 855 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் உபரி நீராக அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 101.99 அடியாகவும் நீர் இருப்பு 30.3 டிஎம்சி யாகவும் உள்ளது. அணையில் இருந்து, பவானி ஆற்றில் 4 ஆயிரத்து 300 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு ஆயிரத்து 500 கன அடி நீரும் என மொத்தம் 5 ஆயிரத்து 800 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக பிருதூரில் உள்ள சுகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலை மற்றும் கோமுகி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு நீர் வரத்து ஆயிரத்து 200 கனஅடி வீதம் உள்ளது. பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 6 புள்ளி 6 சென்டி மீட்டர் அளவுக்கு பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலத்தில் 125 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏரி தூர்வாரப்பட்டது. இந்தநிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழையால், 9 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பி உள்ளது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உபரிநீர் அந்தியூர் கெட்டிசமுத்திரம் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது.

Exit mobile version