மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரையில் இன்று காலை முதலே வெயில் தீயாய்க் கொளுத்திய நிலையில், மாலை நேரத்தில் பலத்த காற்று வீசியது. இதைத்தொடர்ந்து, நகரின் மையப்பகுதியான பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், சிம்மக்கல், அண்ணா பேருந்து நிலையம், பாண்டிக் கோவில் பகுதிகளில் கனமழை பெய்தது. புறநகர்ப் பகுதிகளான விராட்டிப் பத்து, கோச்சடை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. மாலை நேரம் என்பதால் பள்ளி மாணவர்கள், பணி முடிந்து வீட்டுக்குச் செல்பவர்கள் சாலைகளில் பெருகிய தண்ணீரைக் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசின் மூலம் மதுரையில் மையப்பகுதியில் உள்ள செல்லூர் கண்மாய், வண்டியூர் கண்மாய், மாடக்குளம், திருப்பரங்குன்றம் போன்ற கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றது. தற்போது பெய்து வரும் மழையால் கண்மாய்கள் நிரம்பக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிலத்தடி நீமட்டம் உயர வாய்ப்புள்ளது.