கோடை முடிந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவ தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் துவங்கியது முதல் கடுமையான வெப்பத்தால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இதனை போக்கும் வகையில் அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வெயிலின் தாக்கத்தில் இருந்து வந்த மக்களுக்கு ஆறுதல் அளித்து வந்தது. அந்த வகையில் நேற்று இரவு, பலத்த இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், மாலையில் குளிர்ந்த காற்றுடன் கன மழை பெய்தது.பெய்த மழை காரணமாக ஆங்காங்கே நீர் சேர்ந்தது. நகர் முழுவதும் முன்னேற்பாடாக மின்சாரதுறையினர் மின்சாரத்தை துண்டித்தனர். இந்த மழையினால் பூமி குளிர்ந்தது பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்