சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் திடீரென்று கன மழை பெய்தது. வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் வடபழனி, வேளச்சேரி, தியாகராய நகர், நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல், வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதிகளில் பலத்த மழை பொழிந்ததை அடுத்து, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் விடாமல் பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்த பலத்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.