பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை: 100க்கும் மேற்பட்டோர் பலி

பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்

பீகார் மாநிலத்தில் பெய்து வரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 80க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அம்மாநிலத்தின் சீதாமரி மாவட்டத்தில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தின் முக்கிய நதியான பிரம்மபுத்திராவில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தின் 28 மாவட்டங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பார்படா மாவட்டத்தின் பல பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 54 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 2.26 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புகழ்பெற்ற காசிரங்கா தேசிய வனவிலங்கு சரணாலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் வனவிலங்குகள் பாதிப்பு அடைந்துள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கனமழையின் காரணமாக கேரளாவிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, பத்தனம்திட்டா, உள்ளிட்ட மாவட்டங்களில் 20 செண்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version