தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருமழை தொடங்கியதை அடுத்து, தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் மாலத்தீவு, லட்சத்தீவு, கேரள கடல்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவாரூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. நள்ளிரவு முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.