பிகார் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளது.
இருமாநிலங்களிலும் சுமார் 1.15 கோடி பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிகார் மாநிலத்தில் மட்டும் 12 மாவட்டங்களில் 66.76 லட்சம் பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தின் சிதாமரி மாவட்டம், வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 3 லட்சம் மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்துவதற்காக சுமார் 182 கோடி ரூபாயை முதல் கட்டமாக ஒதுக்கியுள்ளார். இந்நிலையில்அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதி அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. 1.79 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காசிரங்கா, போபிடோரா சரணாலயங்களின் 90 சதவீத நிலப்பரப்பு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.