மழை, வெள்ளத்தால் அசாமில் கடும் பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனா, வெட்டுக்கிளிகள் பாதிப்பு ஒரு புறம் இருக்க, தற்போது புயல், வெள்ளம் மிரட்டுகிறது. அசாமில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளத்தால் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அசாமில் கடந்த சில தினங்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அசாமில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேமாஞ்சி, லாகிம்பூர், மஞ்சூலி, சிவசாகர், துப்ரி உள்ளிட்ட 23 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அசாமில் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக இருந்த நிலையில், தற்போது மேலும் அதிகரித்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால், தங்களுக்கு உதவிகள் கிடைப்பதில்லை என்றும், சாப்பாடு இல்லாமல் தவிப்பதாக கண்ணீர் மல்க கூறுகின்றனர் கிராம வாசிகள்…

மக்களே பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாமல் திணறி வரும், அதே நேரம், வன விலங்குகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. வனத்தை விட்டு வெளியேறி விலங்குகள் செல்ல இடமில்லாமல் தண்ணீரில் பல நேரமாக நிற்பது பார்பவர்களை பரிதவிக்க செய்கிறது. குடியிருப்புகளோடு, ஆடு, மாடு போன்ற கால் நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. உடைமைகளை இழந்த பலர் பத்திரமாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பேரிடர் மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர். படகுகள் மூலம் கிராமங்களுக்கு சென்று, மக்களை மீட்கும் பணி தீவிர நடந்து வருகிறது. ஆம்பன், நிசர்கா புயல் என அடுத்தடுத்து கோரதாண்டவம் ஆடிவிட்டு சென்ற நிலையில், தற்போது, பருவமழை மிரட்டி வருகிறது. அசாமில் உள்ள நிலவரம் குறித்து மத்திய அரசு அவ்வப்போது கேட்டறிந்து வருகிறது.

Exit mobile version