கனமழையின் காரணமாக உதகை – அவலாஞ்சி சாலை, உதகை – குந்தா சாலை மற்றும் இத்தலார் ஆகிய பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. உதகை – மைசூர் சாலையில் தலைகுந்தா என்ற பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது. அவலாஞ்சியில் ஒரே நாளில் 91 சென்டி மீட்டர் மழையும், மேல் பவானியில் 45 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் விரைந்துள்ளனர்.
இதே போல் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. உதகை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் விளைநிலங்களில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அறுவடைக்கு தயாரான காரட், உருளை கிழங்கு, பீட்ருட் போன்ற காய்கறி தோட்டங்கள் வெள்ளம் புகுந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.