குஜராத் மாநிலத்தில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் வதோதரா நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் சோட்டா உதய்ப்பூர், பஞ்ச்மகால், தாகோட், மகிசாகர், சூரத், வதோதாரா மாவட்டங்களில் திங்கட்கிழமை மாலையில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மாலை வரை அதிக அளவாகச் சோட்டா உதய்ப்பூரில் 27 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சோட்டா உதய்ப்பூரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் ஒரு அணைப்பகுதியில் தடுக்கப்பட்டது. முன்னதாக அதில் இருந்த இருவரை மீட்புக் குழுவினர் கயிறு கட்டி மீட்டனர்.
இருவாரங்களுக்கு முன் பலத்த மழை பெய்ததால் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. இந்நிலையில் மீண்டும் பலத்த மழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வதோதராவில் நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்து முடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்திலும் பலத்த மழை பெய்து வரும் நிலையில் சம்பா மாவட்டத்தில் ராவி ஆற்றின் வெள்ளப்பெருக்கில் சிக்கிய ஒருவரை மீட்புக் குழுவினர் கயிறு கட்டி மீட்டனர்.
மத்தியப் பிரதேசம் போபால் அருகே உள்ள கேர்வா அணைப்பகுதியில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மூவர் தண்ணீரில் மூழ்கினர். மூவரின் உடல்களையும் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.