வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வெப்ப சலனத்தின் காரணமாக விழுப்புரம், புதுவை, கடலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு, கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.