வடமாநிலங்களை மிரட்டும் கனமழை!!

டெல்லி, அசாம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அசாமில் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை நூறை தாண்டியது.

பருவமழைக்கால தொடக்கத்தின் அறிகுறியாக, டெல்லி, அசாம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அசாமில் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, பொங்கைகான் பகுதியில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு படை வீரர்கள் படகுகள் மூலம் மீட்டு, நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.

தீமாஜி, லகிம்பூர், பிஸ்வாந்த், நாகோன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மாநிலம் முழுவதும் 27 லட்சத்து 64 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 105ஆக அதிகரித்துள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி காசிரங்கா சரணாலயத்தில் 9 காண்டா மிருகங்கள் உட்பட 96 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, முதலமைச்சர் சர்பானந்தா சோனோவாலிடம், பிரதமர் நரேந்திர மோடி வெள்ள நிலவரம் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார்.

இதேபோல் டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஆசாத்பூர், பாகர்கஞ்ச், மூல்சந்த் உள்ளிட்ட பகுதிகளில், சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மின்டோ சுரங்கப்பாதை பகுதியில் மழைநீர் தேங்கியதால் அரசுப்பேருந்து சிக்கிக் கொண்டது. தகவலறிந்து வந்த மீட்பு படை வீரர்கள் பேருந்தில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீர் அகற்றப்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

டெல்லி ஐடிஓ பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் வீடு ஒன்று கனமழையால் இடிந்து விழுந்தது.

கனமழையால் தலைநகர் டெல்லியில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மின்டோ சுரங்கப்பாதை அருகே முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், ஜகாங்கீர்புரி பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த தொடர் மழையால் கோரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சோரிபாகர் பகுதியில் உள்ள வீடுகள் சேதம் அடைந்தன. கனமழை, வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Exit mobile version