வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருவாரமாக கனமழை

கன்னியாகுமரியில் கொட்டித்தீர்த்த கனமழையால், ஐநூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

 

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது.

நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, குலசேகரம், பூதப்பாண்டி, கன்னியாகுமரி, அருமனை, திங்கள்சந்தை, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால், மாவட்டமே வெள்ளக்காடானது.

ஐநூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

நாகர்கோவிலை அடுத்த புத்தேரியில், குளம் உடைந்து வெள்ளம் அடித்துச் செல்வதால், 80க்கும் மேற்பட்ட வீடுகள், விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது.

ராஜாக்கமங்கலம் கிராமத்தை முழுமையாக வெள்ளம் சூழ்ந்த நிலையில், பக்கத்து கிராம மக்கள் உள்ளே சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்டனர்.

இத்தகைய பேரிடர் சமயத்திலும், அரசு அதிகாரிகள் அங்கு தலைகாட்டாததால், வெள்ளத்தை வெளியேற்றும் பணியிலும் பொதுமக்களே ஈடுபட்டுள்ளனர்.

 பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்புவதால், எட்டாயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

இதனால், திற்பரப்பு அருவியே தெரியாத அளவுக்கு, தடுப்புகளை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மாவட்டம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெல், வாழை, தென்னை, ரப்பர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின.

நாகர்கோவில், புத்தேரி, தெரிசனங்கோப்பு, இறச்சகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 800 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை தொடர்ந்து வருவதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்புகின்றன.

தாமிரபரணி ஆறு, வீராணமங்களம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெருஞ்சாணி அணை வேகமாக முழு கொள்ளளவை எட்டுவதால், ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள தர்மசாஸ்தா கோயிலுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

பெருஞ்சாணியில் இருந்து செல்லும் வெள்ளத்தால் சிற்றாறு ஒன்று, சிற்றாறு இரண்டு அணைகளும் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டமே தத்தளித்து வரும் நிலையில், கொரோனாவை காரணம்காட்டி திமுக அரசு மீட்புப் பணிகளை கண்டுகொள்ளாமல் இருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கவும், நிவாரணப் பொருட்கள் வழங்கவும் சிறு முயற்சி கூட இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

Exit mobile version