தமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறுவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பெய்த பலத்த மழை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.