சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மேலும் மழையினூடே சடசடவென ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடனும் கண்டு களித்தனர்.
கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வந்த நிலையில், சுமார் அரை மணி நேரமாக பெய்த ஆலங்கட்டி மழையால், வெப்பம் தணிந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 1 மணி நேரமாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கூடலூர், காமய கவுண்டன்பட்டி, புதுப்பட்டி, சுருளிப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்ததால், பகல் முழுக்க சுட்டெரித்த வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது. கடும் வெயிலால் பயிர்கள் கருகும் சூழலில் பலத்த மழை பெய்தது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியான தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், சில்வார்பட்டி, வடுகபட்டி மற்றும் லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இது மட்டுமல்லாமல் பெரியகுளம் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் பெரியகுளம் பகுதியில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் மழை நீர் நிரம்பியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுப்புறபகுதிகளான, சூளகிரி,தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஓசூர் பகுதிகளில் வழக்கத்தை விட வெயில் அதிகரித்து காணப்பட்டது. இந்தநிலையில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் ஓசூர் சுற்றுப்பகுதி குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. ஓசூர் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூரில் பலத்த மழை பெய்ததால் மலைக்கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. இந்த நிலையில் திடீரென லேசான தூரலுடன் காற்று வீசியது. பின்னர் சுமார் ஒரு மணிநேரம் பெய்த பலத்த மழை பெய்தது.