மும்பையில் கடந்த 3 நாட்களாகப் பலத்த மழை பெய்து வருவதால் நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை தொடங்கியதில் இருந்தே மும்பையில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சாலை, ரயில், விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியது. கடந்த இரு வாரங்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், திங்கட்கிழமை இரவில் இருந்து தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சயான், குர்லா, சுண்ணாபட்டி, கஞ்சூர் மார்க் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சயான் – குர்லா இடையே லால்பகதூர் சாஸ்திரி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்வதால் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்தும் ஊர்ந்தும் மெதுவாகச் செல்கின்றன.