பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.
வடமாநிலங்களான உத்தரபிரதேசம், குஜராத், உத்தரகாண்ட் ஆகியவைகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பீகார் மாநிலத்தில் பாட்னா, பாகல்பூர், கைமூர் உட்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் சுழ்ந்துள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் அதிக மழைநீர் தேங்கியுள்ளதால் குறைவான ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதியில் மழைநீர் சுழ்ந்திருப்பதால், மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும், ஹெலிகாப்டர் மூலம் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். ஹெலிகாப்டர் மூலம் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.
இதனிடையே, வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட அம்மாநில துணை முதல்வர் சுஷில் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் படகு மூலம் மீட்டனர்.