வேதாரண்யத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெய்த கடும் மழை காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யத்தை அடுத்த அகத்தியான்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி செய்யும் இரண்டாவது இடமாக வேதாரண்யம் திகழ்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் தொடர்ந்து வீசிய காற்றினால், உப்பளம் பகுதிகளில் கடல் நீர் உள்ளே புகுந்தது. மேலும் கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் விட்டு விட்டு மழை பெய்ததால் உப்பு உற்பத்தி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்,பெண் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.