வைகுண்ட ஏகாதசியையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி, வெகு விமரிசையாக நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு இன்று அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றது.
ரத்தின அங்கி அணிந்து காட்சியளித்த உற்சவர் நம்பெருமாள், சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் சொர்கவாசல் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். ரங்கா… ரங்கா… என்ற முழக்கங்களுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவர் பார்த்தசாரதி, சொர்க்க வாசலில் எழுதருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து சொர்க்க வாசல் வழியாக பெருமாளுக்கு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
108 திவ்ய தேசங்களில் 59-வது திவ்ய தேசமான திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில், பக்தர்களின்றி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதே போல், திண்டுக்கல், கடலூர், சேலம், நாமக்கல் என தமிழ்நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோயில்கள் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி, வெகு விமரிசையாக நடைபெற்றது.