சர்வதேச கள்ள நோட்டுக் கும்பலின் தலைவன் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில், கள்ள நோட்டு மற்றும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சர்வதேசக் குற்றவாளியைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

திருவனந்தபுரம் கட்டக்கடையைச் சேர்ந்த சவுத் என்பவர் தனக்குக் கள்ளநோட்டு கொடுத்ததாக வாடகைக் கார் ஓட்டுநர் ஒருவர் மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்துக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சவுத் சர்வதேசக் கள்ள நோட்டுக் கும்பலின் தலைவன் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவனைக் கைது செய்த காவல் துறையினர், அவனது வீட்டிலிருந்து, 77 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் மற்றும் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும் சவுத் கொடுத்த தகவலின் பேரில், மேலும் நான்கு பேரைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களைச் சிறையில் அடைத்தனர். கள்ளநோட்டுக் கும்பல் தலைவன் சவுத் மீது கேரள மாநிலத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Exit mobile version