தமிழகத்தை சேர்ந்த பாடி பில்டிங் வீரர் பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுக்கோப்பான உடல் கொண்டு விருது பெற்ற அந்த இளைஞன் பற்றிய சிறிய தொகுப்பை தற்போது காணலாம்…
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். அவர் தன்னுடைய சிறுவயதில் தனது ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்துவதற்காக உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்தார். அதன் பின் தன்னுடைய பயிற்சியாளர்கள் அளித்த ஊக்கத்தின் காரணமாக பாடி பில்டிங் துறையைத் தேர்வு செய்துள்ளார். அது, அன்று முதல் முழுமூச்சாய் பாடி பில்டிங் துறையில் தனது அயராத உழைப்பை வித்திட்டு வந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக தனது அயராத உழைப்பினாலும், கடினப் பயிற்சியாலும் பல்வேறு பாடி பில்டிங் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் மூத்த தொழில்நுட்பப் பணியாளாராகப் பணிபுரிந்து வருகிறார் பாஸ்கரன். தான் சாதிப்பது மட்டுமல்லாமல் தன்னைப் போல் பலரும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கடந்த 10 ஆண்டுகளாக உடற்பயிற்சிக் கூடத்தையும் நடத்தி வருகிறார்.
இந்த உடற்பயிற்சி கூடம் மூலம் மற்றவருக்கும் தனது வெற்றியைப் பெற்றுத்தரப் பாடுபடும் இவர், பாடி பில்டிங் துறையைச் சார்ந்தவர்களுக்கு மத்திய அரசின் கீழ் ரயில்வே துறையில் வேலைவாய்ப்புகள் உள்ளதைக் குறிப்பிட்டு, தமிழக அரசும் விளையாட்டு பிரிவினருக்காக ஒதுக்கியுள்ள 3 சதவீத வேலை வாய்ப்பு இட ஒதுக்கீட்டில், பாடி பில்டிங் துறையினருக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். அப்படிச் செய்தால் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் இந்த பாடி பில்டிங் துறையைத் தேர்வு செய்வார்கள் என மனம் திறந்துள்ளார் பாஸ்கரன்.
தனக்குக் கிடைத்திருக்கும் அர்ஜூனா விருதை மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்காக அர்ப்பணிக்க உள்ள அவரது எண்ணம் பலரின் மனதைக் கொள்ளை கொண்டிருக்கிறது. தான் தேர்வு செய்த துறையில் தான் சாதித்தது மட்டுமல்லாமல் பல சாதனையாளர்களை
உருவாக்கி வரும் தமிழன் பாஸ்கரனுக்கு பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதைப் பற்றி பாஸ்கரன் கூறுகையில் “இந்தத் துறையில் சாதிப்பதற்கு கடினப் பயிற்சியும் உழைப்பும் இருப்பினும் கூடப் பொருளாதாரமும் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், ஒரு வேளை தான் பொருளாதாரத்தில் முன்னேறி இருந்திருந்தால் 20 ஆண்டில் சாதித்ததை 10 ஆண்டில் சாதித்திருக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.