ஹஜ் புனித பயணத்துக்கு செல்லும் தமிழ்நாடு யாத்ரீகர்களுக்கு சென்னையில் இருந்து விமானம் இயக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, தனியார் நிறுவனங்கள் விமான சேவை கட்டணத்தை அதிகமாக வசூலிப்பதாக குற்றம்சாட்டினார். ஒவ்வொரு முறை பயணம் செய்யும்போது, விமான சேவைக் கட்டணம் வித்தியாசமாக இருப்பதாகவும் தம்பிதுரை குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, முன்பதிவு செய்யும் நாள், எத்தனை பேர் பயணம் என்பதை பொருத்து விமான சேவைக் கட்டணம் மாறுபடும் என தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் முகமது ஜான், ஹஜ் புனித பயணத்துக்கு செல்லும் தமிழ்நாடு யாத்ரீகர்கள் கொச்சி சென்று விமான பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவதாகவும், அதற்கு பதிலாக, சென்னையில் இருந்து விமானத்தை இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டுமென்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாடு பரிந்துரைத்தார்.