“வாழ்வின் முதல் ஆசிரியர் தந்தை” – இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

தாங்கள் ஏழைகளாக இருந்தாலும், தங்கள் பிள்ளைகளை ஏழ்மை தாக்காமல், பார்த்துப் பார்த்து வளர்க்கும் தந்தையர்கள் அனைவருக்கும், தந்தையர் தின வாழ்த்துக்கள். 

பத்து மாதங்கள் தாய் நம்மை வயிற்றில் சுமந்தாலும், தாயையும், நம்மையும் சேர்த்து, வாழ்நாள் முழுவதும் நெஞ்சில் சுமக்கும் உறவே தந்தை. அன்னையிடம் நாம் அன்பை வாங்கலாம்.. தந்தையிடம் அறிவை வாங்கலாம் என்னும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள், தந்தையே நம்  என்பதை உணர்த்துகிறது. உலகின் பல்வேறு நாடுகள், பல்வேறு தேதிகளில் தந்தையர் தினத்தை கொண்டாடுகிறது. அதில் இந்தியா உட்பட 52 நாடுகள், ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையை தந்தையர் தினமாக கொண்டாடுகிறது.

1909ம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டோட் என்ற பெண், அன்னையர் தினம் கொண்டாடப்படும் போது, தந்தையருக்கு ஏன் தினம் கொண்டாடக் கூடாது என எழுப்பிய கேள்வியின் விளைவே, 1910ம் அண்டு முதல் தந்தையர் தினம் கொண்டாடப்படுகின்றது. அதன்பின், 1966 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் கொடுத்த அங்கீகாரத்தின் பேரில், இத்தினம் அதிகாரபூர்வமாக உறுதியானது. அதற்குப் பின்னர் வந்த அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன், 1972 ஆம் ஆண்டு முதல் தந்தையர் தினத்தை அமெரிக்க விடுமுறை தினமாக அறிவித்தார்.

தன் வாழ்வில் எத்தனையோ இன்னல்களை பட்டாலும், அதை வெளிக்காட்டாமல், தனது துன்பத்தின் நிழலைக் கூட, பெற்ற பிள்ளை மீது படாமல் பார்த்துக் கொள்பவர்தான் தந்தை. தனது வாழ்நாளில் தந்தைகள் தலை வணங்குவதில்லை என நாம் நினைத்தாலும்… சிறு வயதில் நம்மை தலையில் தூக்கி அமர வைக்க நிச்சயம் அவர் நமக்காக தலை வணங்குகிறார். முதன் முறையாக தலை வணங்கி, நம்மை உயரே தூக்கும் தந்தைகளின் கனவெல்லாம், பிள்ளைகள் வாழ்வில் உயர வேண்டும் என்பதே. ஓய்வு காலத்தின் போதும் கூட, பெற்ற பிளைகளின் நலனை மட்டுமே சிந்திப்பது இரு உயிர்கள். ஒன்று தாய்.. மற்றொன்று தந்தை. ஆனால், தந்தை என்பவர், தன்னுடைய அன்பை வெளிப்படையாக காண்பிப்பது இல்லை. பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் செய்தால் கூட, கண்டிப்புடனேயே இருப்பார். அப்படி அன்பை உள்ளேயே வைத்துக்கொள்வது, பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக மட்டுமே. இப்படி, பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காகவே தங்களை அர்ப்பணிக்கும் தாய், தந்தையரை, பிற்காலத்தில் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அப்படி ஒரு நிலை வரும்போதுதான், அந்த வலியை உணர முடியும்.

Exit mobile version