சோதனைகளை சாதனைகளாக மாற்றிக்காட்டிய வெற்றி கேப்டன் ”விராட் கோலி”

அனுபவம் வாய்ந்த முன்னணி வீரர்கள் கூட எட்டிப்பிடிக்க ஆசைபடும் பல அரிய சாதனைகளை அசுர வேகத்தில் எட்டிப்பிடித்து மெஷின் போல ஓடிக்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரன் மெஷின் விராட் கோலியின் பிறந்த நாள் இன்று… 

கிரிக்கெட் பின்புலமே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து, இன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவே, அவர் அடைந்திருக்கும் வளர்ச்சி கண்டிப்பாக விராட்டின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்லலாம்.

கோலியின் அசூர ஆட்டத்தை கண்டு வியந்த முதல் ரசிகர்கள் யார் தெரியுமா? அவரின் பக்கத்து வீட்டுக்காரர்கள் தான். அன்று தனது அதிரடியால் பக்கத்து வீட்டுக்காரர்களின் ஜன்னல்களை மிரட்டிய விராட், இன்று எதிரணியை பேட்டிங்கிலேயே அச்சுறுத்தி வருகிறார்.

கிரிக்கெட் மீது விராட் கொண்ட தீராப்பசி, பல சாதனைகளுக்கு பின்னரும் இன்றும் தொடங்குகிறது. 19வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டி தான் விராட்டின் முதல் பரீட்சை எனலாம். தன்னுடைய அதிரடியையும், அசுர வேகத்தையும் பேட்டிங்கில் மட்டும் இல்லாமல் கேப்டன் பொறுப்பிலும் வெளிப்படுத்தி, உலக கோப்பையையும் தனது பக்கத்தில் வர செய்தார்.

2008 ஆம் ஆண்டு விராட்டிற்கு ராசியான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். இலங்கைக்கு எதிரான போட்டியில் சச்சின், சேவாக் ஆகியோர் காயம் காரணமாக விளையாடாததால் அந்த பொன்னான வாய்ப்பு விராட்டுக்கு கிடைத்தது. முதல் போட்டியில் 12 ரன்களில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் அந்த தொடரில் 4-வது போட்டியில் தனது முதல் சர்வதேச அரைசதத்தை அடித்தார்.

அன்று தொடங்கிய அவரின் ரன் வேட்டை இன்று வரை அப்படியே தொடர்கிறது. இந்தியா அணியில் டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வரும் விராட் மீது ஏழாத விமர்சனங்களே இல்லை.

ஆங்கிரி பேட் என்ற விமர்சனம் அவரின் மனதை புண்படுத்தியதே தவிர விளையாட்டை ஒரு போதும் பாதித்தது கிடையாது. 2013 ஐசிசி-யின் பேட்ஸ் மேன் தரவரிசையில் கோலி முதலிடமும் பிடித்தார். ஓய்வே இல்லாமல் இந்திய அணியில் ஆடிவரும் ஒரே வீரர் கோலிதான்.

போதும் போதும்.. என்ற அளவிற்கு ஏகப்பட்ட சாதனைகள். விராட் கோலியை கிரிக்கெட் வீரராக ரசித்த பலர் அவரை கேப்டனாக ஏற்றுக் கொள்ள தயங்கினர். ஆனால் தம்மால் முயன்ற அளவிற்கு அந்த பதவிக்கு உரிய மரியாதையை விராட் சிறப்பாக செய்து வருகிறார் என்பது அவரின் ரசிகர்களின் கருத்து.

சொந்த வாழ்க்கையிலும் விராட்டிற்கு நினைத்து எல்லாம் கைக்கூடியது. பல்வேறு போராட்டங்கள் விமர்சனங்களுக்கு பிறகு காதல் மனைவி அனுஷ்கா சர்மாவை கரம் பிடித்தார் விராட். தனது மனைவி குறித்து என்ன விமர்சனங்கள் வந்தாலும் அதை உதரி தள்ளி விட்டு அனுஷ்கா தான் எனது கேப்டன் என்று கம்பீரத்துடன் எல்லா பேட்டியிலும் பதிவு செய்தார்.

விராட் கோலி இதுவரை, ஒருநாள் போட்டியில் 43 சதங்கள் 54 அரை சதங்களும் , டெஸ்ட் போட்டியில் 26 சதங்கள் 22 அரை சதங்களும் , அவர் சதம் அடிக்காத ஒரே தொடர் டி-20 தான். இந்தியாவின் அடுத்த சச்சின் கோலி என்பது வெறும் வார்த்தை மட்டுமில்லை அவரின் ரசிகர்களுக்கு அது ஒரு எமோஷன்.

கோலி.. கோலி என அரங்கத்தில் குரல்கள் முழுங்குவதை பார்க்கும் போது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று விராட் நெகிழ்ச்சியுடன் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். விராட்டின் உழைப்பிற்காக இந்திய அரசாங்கம் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, ராஜிவ் காந்தி, கேல் ரத்னா, அர்ஜூனா ஆகிய விருதுகளை அளித்து பெருமை படுத்தியது.

விராட்டின் இந்த சாதனை அப்படியே தொடர வேண்டும் என்பது தான் அவரின் ரசிகர்களின் ஆசை. தனது 31 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் விராட்டிற்கு நியூஸ் ஜெ செய்தி குழுவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Exit mobile version