தமிழ் சினிமாவின் முன்னணி நாயகி த்ரிஷாவின் பிறந்த தினம்!

மெல்லிய புன்னகையையும் மிரட்சி இல்லாத மின்னல் பார்வையையும், தனது 22 வருட கலையுலக பயணத்திற்கான பேரூற்றாக கொண்டு புகழ் பெற்றவர் நடிகை த்ரிஷா. அவரின் பிறந்த தினம் இன்று…

 

1983 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த நடிகை த்ரிஷாவின் இயற்பெயர் அனுராதிகா.

இளம் வயதிலேயே மாடலிங் துறையில் தடம் பதித்த அவர், விளம்பரங்களில் நடிக்க துவங்கியதன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.

நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு தனது பயணத்தை துவங்கிய அவருக்கு, ஆரம்பகாலங்களில் பட வாய்ப்புகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. ஜோடி, குஷி போன்ற படங்களில் ஓரிரு காட்சிகளில், துணை நடிகையாக மட்டுமே திரையில் தோன்றினார்.

மனம் தளராமல் பயணித்த த்ரிஷா, அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ‘மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் நாயகியாக அவதாரமெடுத்தார்.

அந்தப் படத்தில் த்ரிஷாவின் உதடுகள் உதிர்த்த, ‘தனியாவா..? ஓ பேசலாமே!’ என்ற வசனம், அவரைப் பற்றி அனைவரையும் பேச வைத்தது.

ஒல்லியான தேகம், துறு துறுவென சுழன்றடிக்கும் விழிகள், இயல்பான உடல் மொழி என த்ரிஷாவின் கட்டழகும், நடிப்பும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சொக்க வைத்தன.

தொடர்ந்து அவர் மாதவன், ஷாம் ஆகியோருடன் லேசா லேசா, விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து, அஜித்துடன் ஜி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடிக்க, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார்.

நடிப்பு மட்டும் இல்லாமல் நடனத்திலும் த்ரிஷா காட்டிய வேகமும் நளினமும் ரசிகர்களை ஆடாமல் ஆட்டுவித்தது.

கில்லி படத்தில் “அப்படிப் போடு போடு” என்ற பாடலில், விஜய்க்கு இணையாக அவர் போட்ட குத்தாட்டம் அனைவரையும் அசரடித்தது.

பீமா, மங்காத்தா, அபியும் நானும், சம்திங் சம்திங் போன்ற படங்கள் த்ரிஷாவின் ரசிகர்களுக்கு என்றைக்கும் ஃபேவரைட்டாக இருக்கும் என்றால்,

சிம்புவும், த்ரிஷாவும் இணைந்து ரசிகர்களை உருக வைத்த விண்ணைத்தாண்டி வருவாயா, விஜய் சேதுபதியுடன் நடித்த 96 ஆகிய படங்கள் த்ரிஷாவை தனித்து அடையாளம் காட்டின.

கலையுலகில் அவர் தொடர்ந்து பல உயரங்கள் தொட வாழ்த்தி மகிழ்கிறது நியூஸ் ஜெ.

Exit mobile version