கண்டதைச் சொல்லுகிறேன்
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்குக் காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ…’
– ஜெயகாந்தன்.
கண்ணதாசன் தினமும் தூங்கும்போது தலையணைக்கடியில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு தூங்குவதுண்டாம். அது பைபிளோ, குரானோ, கீதையோ அல்ல. ஒரு நாவல்.. ஆம். ஜெயகாந்தன் எழுதிய யாருக்காக அழுதான் என்ற நாவல்.
எழுத்து சிங்கம், கலகக்காரன், திமிர் பிடித்தவன், ஞானச்செருக்குடையவன், மரியாதை தெரியாதவன், வாழும்போதே அங்கீகரிகப்பட்ட எழுத்தாளன், இடம் பொருள் தெரியாதவன் என எல்லா விமர்சனங்களுக்கும் ஒரே அடையாளமாக ஒருவரைச் சொல்லவெண்டுமென்றால் இவரைத்தான் சொல்ல வேண்டும்…
தண்டபாணி முருகேசன் என்ற இயற்பெயர் கொண்ட , “வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயங்களே” என்ற நம்பிக்கையை தன் படைப்பின் வழியாக பாமரர்களுக்கு காட்டிய படைப்புலக கலகக்காரன் ஜெயகாந்தன் தான் அவர். பிறந்தநாள் இன்று.
1934,ஏப்ரல் 24ம் தேதி பிறந்த ஜெயகாந்தனை தமிழுலகம் அறிந்தது 1950 ல் தான். 5ம் வகுப்பு வரைதான் ஏட்டுக்கல்வி. அதற்குப்பிறகு வாழத்தொடங்கவேண்டும் என்று விரும்பியதன் விளைவாய் விழுப்புரத்தில் மாமாவுடன் தங்கினார். அங்குதான் பாரதி உள்ளிட்ட இன்னபிற இலக்கியகர்த்தாக்கள் அறிமுகமாகினர். தோழர் ஜீவாவின் அரவணைப்பில் தொடர்ந்து வாசிக்கவும் எழுதவும் செய்கிறார்..
1950 ல் சரஸ்வதி, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் ஜெயகாந்தனின் படைப்புகள் வெளியாகின. தொடர்ந்து எழுதிக்குவித்த இந்த அமரத்துவம் பெற்ற படைப்புகளின் பிதாமகனுக்கு இலக்கிய தாய் தனது தலைசிறந்த விருதான ஞான பீடத்தை 2002-ம் ஆண்டு அணிவித்து மகிழ்ந்தாள். 1972-ல் சாஹித்ய அகாடமி, 2009-ல் இந்திய அரசின் பத்ம பூஷன், 2011-ல் ரஷ்ய விருது போன்றவைகள் அவரை மேலும் பெருமைப்படுத்தின.
மற்றெந்த எழுத்தாளருக்கும் இல்லாத சிறப்பு என்றால் ,எழுதிக்கொண்டிருந்த காலத்திலும் சரி, எழுதுவதை நிறுத்திக்கொண்ட காலத்திலும் சரி, ஜெயகாந்தனுக்காக பேசியது ஜெயகாந்தனின் வாசகர்களோ ஆதரவாளர்களோ அல்ல. ஜெயகாந்தனின் பாத்திரங்கள் மட்டுமே.
தன் படைப்புகளின் மீது அசாத்தியமான நம்பிக்கையும், எந்த படைப்பிலும் தன்க்கென ஒரு தனி நிலைப்பாட்டையும் கொண்டிருப்பது ஜெயக்காந்தனின் தனிச்சிறப்பு. ஒருமுறை தமிழில் எழுதி ஜீவிக்க முடியும்னு நீங்க நம்புனீங்களா?” எனக் கேள்வி வைக்கப்பட, தமிழ் ஜீவிக்கட்டும் என நம்பித்தான் நான் எழுதினேன் என்று பதிலளித்தார் ஜெயகாந்தன்.
ஏப்ரல் 8, 2015-அன்று இரவு 9.00 மணிக்கு உடல்நலக்குறைவால் சென்னையில் ஜெயகாந்தன் காலமானார்…எழுத்தாளன் மரித்துப்போனால் அவன் எழுத்துகள் வழி மறுபிறப்பெடுக்கிறான்.ஆம், இப்போது இந்த நிமிடம் வரை “அக்கினிப்பிரவேசம்” அவசியமானதாகத்தான் இருக்கிறது..வாசிப்பின் வழியே வாழ்ந்துகொண்டிருக்கும் ஜெயகாந்தனை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்துவதே சிறந்த பிறந்தநாள் கொண்டாட்டமாக இருக்கும்..
ஹேப்பி பர்த்டே ஜெயகாந்தன்….