மகர பூஜை நிறைவு பெற்றதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டு, ஐயப்பனின் ஆபரணங்கள், பந்தளம் அரண்மனையில் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 15-ம் தேதி, மகர பூஜை நடைபெற்றது. அதற்காக, கடந்த டிசம்பர் 30-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
மகரபூஜையின் போது, ஐயப்பனுக்கு அணிவிக்க பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள் எடுத்துவரப்பட்டு, ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட நிலையில், மகரபூஜை நடந்து முடிந்ததை அடுத்து, நேற்று சபரிமலையில், ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது.
முன்னதாக, ஐயப்பனுக்கு அணிந்திருந்த திருவாபரணங்கள் கழற்றப்பட்டு, சந்தனப் பெட்டியில் பாதுகாப்பாக வைத்து, மீண்டும் பந்தளம் அரண்மனையில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அடைக்கப்பட்டுள்ள ஐயப்பன் கோவில் நடை, மாசி மாத பூஜைக்காக, மீண்டும் பிப்ரவரி மாதம் 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 5 நாட்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.